Wednesday, May 30, 2007

பதிவுகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு சுகம்

அப்படி இப்படி என்று, கடைசியாக பதிவு ஆரம்பித்தாயிற்று. என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. தமிழ்மணம் வேறு, மூன்று பதிவுகளுக்கு பின் வருக என்று தலையில் கொட்டுகிறது. நானும் மொட்டு வலையை உத்து உத்து பார்த்தும் ஒன்னும் நடக்கவில்லை. பிறகு, வழக்கம் போல, நமக்கு கைவந்த கலையான வெட்டி ஒட்டுவதே செய்துவிடலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனாலும், இந்த வரலாற்று முக்கியத்துவம் (சரி, சரி,சும்மா தமாசு)வாய்ந்த பதிவு, வெறும் ஜல்லியாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் அண்ணாத்தே இளவஞ்சி அவர்களின் பதிவைப்பற்றி எழுதலாம்(வெட்டி ஒட்டலாம்) என்பதின் விளைவே இப்பதிவு.


இவர் எழுதும் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், மிகப்பிடித்தவைகளின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

எனக்கு பிடித்த பதிவுகள் :-

1. நல்லா ( நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய
இவருடைய பதிவை படிப்பதே ஒரு சுகானுபவம்.ஆனால், இவருடைய இந்த பதிவை படித்தால், உங்களின் மனம் நெகிழ போவது உறுதி. இவர் சொல்லும் பொருளை நம் கண் முன்னே கொண்டுவந்து விடும், இயல்பான எழுத்துக்கு சொந்தகாரர்.

இவருடைய "தவிர்த்திருக்கக் கூடிய நான்கு செயல்கள்" படிக்கும் போது, அவர்கள் நடந்து வந்தது, கிராமத்து பெண்ணின் கையறுநிலை பார்வை, கம்பத்தில் சாய்ந்தபடி இவர் நிற்பது, நம் கண் முன்னே தோன்றும்.

விகடமாக ஆரம்பித்து, மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகளை சொல்வது இவரது எழுத்து நடை.

2. மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பு...!!

3. விட்டில் பூச்சிகள்

4. எமிலி என்றொரு தோழி

5. ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..

6. சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்

7. அப்பாவின் சட்டை

8. ஜிம்மியும் சில நிகழ்வுகளும்

9. கல்யாணம் தான் கட்டி கிட்டு...

தமிழ் வலையுலகில் ஒரு பய புள்ள விடாம படிச்சது, இத்தொடராகத்தான் இருக்கும்.

10. காலச்சுழிப்பில் தொலைந்தவைகள்

தமிழ்மண,தேன்கூடு மக்களே, இதோ உங்கள் விஜயபாபுவும் , தமிழ்மணத்திற்கும், தேன்கூட்டிற்க்குள்ளும் வந்து விட்டதை அறிக.

Wednesday, May 16, 2007

எனது ஊர் - அசகளத்தூர்

இரண்டு பக்கம் ஆறுகளாலும், இரண்டு பக்கம் ஏரிகளாலும் சூழப்பட்டது இந்த கிராமம். மக்கள் தொகை 7000-க்கும் மேல்.மிகவும் பசுமையான கிராமம். முக்கிய வருமானம் தரும் தொழில், விவசாயம்.
ஒரு மேல் நிலை பள்ளி உள்ளது. தபால் நிலையமும், நூலகமும் உள்ளன. அனைத்து தெய்வங்களுக்கும் கோயில்கள் உள்ளன். பெரியாயி அம்மனுக்கு, ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கள்ளக்குறிச்சியிலிருந்து, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மூன்று அரசுப்பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்தும் இயக்கப்படுகின்றன.
படித்தவர்கள் விழுக்காடு தோராயமாக, 40 விழுக்காடு.
நெல், கரும்பு, கிழங்கு , சோளம், எள் , கேழ்வரகு , உளுந்து, மக்காச்சோளம் மற்றும் துவரை அகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
வீட்டுக்கு ஒருவராவது, திரைகடல் ஒடி திரவியம் தேடுவதால், பொருளாதார நிலையில் சிறந்து விளங்கும் ஊர். இதனால் முக்கியமாக நிகழ்ந்தவை:
1. அனைவரும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
2. இடத்தின் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது.
3. அனைவரின் வீட்டிலும் , ஒரு சோனி தொலைகாட்சி இருக்கிறது.
(நல்லதா? கெட்டதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்)

மற்றபடி சொல்லுவதற்க்கு ஒன்றும் இல்லை.
Posted by Picasa

Monday, May 14, 2007

சுய விளம்பரம்

என்னை பற்றி : பெயர் : விஜயபாபு பூபதி.
வயது : 27.
ஊர்: அசகளத்தூர்.
தொழில்: கணிப்பொறி வல்லுனர்.

எனக்கு நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்பது அவா. உனக்கு என்னடா அதற்க்கு தகுதி என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. எல்லாம் 7 வயதில் இருந்து மாலைமதியும் , ராணிமுத்துவும் படிக்க ஆரம்பித்து , 9 வது வயதில் பாலகுமாரன் , ராஜேஷ்குமார் , பட்டுகோட்டை பிரபாகர் மற்றும் சுபாவும், பின்னர் ஜயகாந்தனையும், சுஜாதாவையும் தேடி தேடி படித்த அனுபவம் தான். இந்த அனுபவம் கை கொடுக்கும் என்கிற நம்பிக்கை தான் நான் எழுத தூண்டியது.

இவ்வளவு நாட்களாக, எழுதாமல் இருந்ததற்கு காரணம், என்ன எழுதவது என்று தெரியாதது தான். கடந்த இரு வருடங்களாக, ஒரு நாளைக்கு குறைந்தது 5 மணி நேரம்(வேலையே இது தான்), வலையில் எழுதுபவர்களின் எழுத்தை படிக்கும் போதெல்லாம், நாமும் ஏன் எழுத கூடாது என்ற எண்ணம் தோன்றி மறையும். இரண்டு வருடம் துபையிலும், இரண்டு வருடம் ஆப்கானிலும் ஜல்லி அடித்து இருந்தாலும், "இந்த தமிழன், இந்தி பேச மாட்டான்" என்று சொல்லி வந்த நாம், ஏன் எழுத கூடாது? என்று என் மனதை தேத்தி கொண்டு , எழுதுகிறேன். ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நான் கிறுக்க போவதில் ஒன்றும் உபயோகமாய் இல்லை என்றாலும் , கண்டிப்பாக எழுத்து பிழை இருக்காது (முயற்சி செய்வேன்).

தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசையினால் தொடங்கப்பட்ட பதிவே இது.